தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி

தபால் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-02 18:48 GMT

கடிதம் எழுதும் போட்டி

தபால் துறையில் தேசிய அளவில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி 31.10.2023 வரை நடைபெறும். கடிதம் இந்தி, ஆங்கிலம், தமிழ் இதில் ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும். கடிதம் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்நாட்டு கடிதத்திலோ அல்லது 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் ஏ-4 அளவுள்ள வெள்ளை காகிதத்திலோ எழுதி அஞ்சலக உறையில் வைத்து அனுப்ப வேண்டும்.

மேலும், கடிதத்தில் "நான் 18 வயதுக்கு மேற்பட்டவர்" அல்லது "நான் 18 வயதுக்கு உட்பட்டவர் " என்று சான்றளிக்க வேண்டும். அனைத்து வயதினரும் இப்போட்டியில் பங்கு பெறலாம் என்றாலும் 18 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு பரிசுகள் தனித்தனியே வழங்கப்படும்.

பரிசு

போட்டிக் கடிதத்தை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம், கடலூர் என்ற முகவரிக்கு 31.10.2023-க்குள் அனுப்ப வேண்டும். 31.10.2023 பிறகு பெறப்படும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாநில அளவில், சிறந்த 3 கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு, அந்த கடிதங்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும்.தேசிய அளவில் சிறந்த 3 கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரம், 3-வது பரிசாக ரூ, 10 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த போட்டியில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்