தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்து வருகிறது: ஜவாஹிருல்லா பேட்டி

பா.ஜனதாவில் இருந்து கட்சிகள் வெளியேறி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்து வருகிறது என கரூரில், ஜவாஹிருல்லா பேட்டி அளித்தார்.

Update: 2023-10-01 17:12 GMT

செயற்குழு கூட்டம்

கரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பிறந்த நாளில் தமிழக சிறைகளில் சுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்தி வந்துள்ளோம். இந்த கோரிக்கைகளை ஏற்று 49 சிறைவாசிகளை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறது.

முற்றுகையிட உள்ளோம்

ஆனால் தமிழக அரசு பரிந்துரை செய்து ஏறத்தாழ ஒரு மாதமாகியும் கவர்னர் இந்த கோப்புக்கு ஒப்புதல் தராமல் காலம் கடத்தி வருகிறார். இதனால் கவர்னரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை வருகிற 26-ந்தேதி முற்றுகையிட உள்ளோம்.

சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க வேண்டி தமிழக அரசு பரிந்துரைத்தும், கவர்னர் தனது விருப்பத்திற்கு ஏற்ப ஒருவரை நியமித்து இருக்கிறார். ஜனநாயகத்திற்கு எதிராக பா.ஜனதா அரசு செயல்படுகிறது. தமிழகம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னரை பயன்படுத்தி, அந்த மாநில ஆட்சிக்கு எதிராக, அவர்களுடைய நடவடிக்கைகளை முடக்கும் வகையில் செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரே நாடு, ஒரே தேர்தலில் செலவீனம் குறைவு என்பது தவறான கண்ணோட்டம்.

கூட்டணி வலுவிழந்து வருகிறது

பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவந்ததை வரவேற்கிறோம். இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பா.ஜனதாவில் இருந்து தற்காலிகமாகத்தான் அ.தி.மு.க. விலகியுள்ளது. பா.ஜனதாவில் இருந்து கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்து வருகிறது. ஆனால் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாள்தோறும் வலுவடைந்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நீர் தருவது கர்நாடகத்தின் கடமை. காவிரி நீர் மேலாண்மை என்ன உத்தரவிட்டு உள்ளதோ அந்த கடமையை நிறைவேற்றாதது மிகப்பெரிய குற்றம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்