முட்டை உற்பத்தி செலவுக்கு ஏற்ற குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் ஒற்றை சாளர முறையில் விலை மாற்றம் செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது ஒவ்வொரு மண்டலத்திலும் உற்பத்தி, விற்பனை மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப விலை வித்தியாசத்தை ஆண்டுக்கு 3 முதல் 5 முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும். 2 முதல் 5 பைசா வரை மட்டும் விலையில் மாற்றம் செய்ய பரிந்துரைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் எந்த அமைப்பும் மைனஸ் முறையை நடைமுறைப்படுத்த முயற்சிக்க கூடாது என்றும், ஒவ்வொரு உற்பத்தி மண்டலங்களிலும் ஒற்றை சாளர முறையில் முட்டை மற்றும் முதிர்வு கோழி விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக நாமக்கல் போலீசார் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.