நாமக்கல்லில் 844 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டு வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர், எம்.பி. பங்கேற்பு

நாமக்கல்லில் நேற்று புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 844 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-09-05 17:27 GMT

நாமக்கல்லில் நேற்று புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 844 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுமைப்பெண் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளின் வங்கி கணக்குக்கு மாதம் ரூ.1,000 நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகளில் முதல்கட்டமாக 4,385 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 கல்லூரிகளை சேர்ந்த 844 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்காக வங்கி ஏ.டி.எம். கார்டு வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில், நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி, பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்கல்வி படிக்கும் 844 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்காக வங்கி ஏ.டி.எம். கார்டு, நிதி விழிப்புணர்வு கையேடு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மலர் ஆகியவற்றை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தடைப்பட கூடாது

முதல்-அமைச்சர் அரசுப்பள்ளி மாணவிகள் உயர்கல்வி கட்டாயம் பயில வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினத்தில் தொடங்கி வைத்து உள்ளார்.

கல்லூரி படிக்கும் மாணவிகளின் கல்வி எந்த காரணத்தினாலும் தடைப்பட கூடாது என்பதற்காகவும், ஏழை பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி சமுதாயத்திற்கே பயன்பெறும் என்ற வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆன்லைன் பதிவு

முன்னதாக பேசிய ராஜேஸ்குமார் எம்.பி. இந்த திட்டத்தில் பயன்பெற நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதில் பதிவு செய்ய அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றார்.

இதில் தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி துணைத்தலைவர் பூபதி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், கிருஷ்ணலட்சுமி, முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ்குமார் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்