சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

நாமக்கல்லில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Update: 2022-08-17 15:43 GMT

நாமக்கல்லில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விநாயகர் சிலைகள்

நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சாலையோரம், வீதிகள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதனால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி ஆங்காங்கே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் கருப்பட்டிபாளையம் அருகே உள்ள சக்திநகரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. இங்கு ½ அடி முதல் 8 அடி உயரம் வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிங்கம், மயில், மான், எலி மற்றும் யானை மீது விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற சிலைகள், ஆஞ்சநேயர் மற்றும் சிவன், பார்வதியுடன் உள்ள விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் புதிதாக தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது.

ரூ.10 ஆயிரம் வரை விற்பனை

இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் சித்ரா கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. வீடுகளில் பயன்படுத்தும் வகையில் சிறிய வகையிலான சிலைகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்தோம். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் சிலைகளை தயாரிக்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளோம். இருப்பினும் இதுவரை போதுமான ஆர்டர் வரவில்லை. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் சிலைகள் பேப்பர் கூழ், கிழங்கு மாவு மற்றும் களிமண் கொண்டு தயாரிப்பதால் எளிதில் தண்ணீரில் கரைந்து விடும். எனவே நாமக்கல் மட்டும் இன்றி கரூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் எங்களிடம் சிலைகளை வாங்கி செல்கிறார்கள். இந்த சிலைகளை அவற்றின் தரத்தை பொறுத்து ரூ.50 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்