நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

Update: 2022-09-06 17:21 GMT

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு

நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம்(ஆகஸ்டு) 6-ந் தேதியன்று மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடந்த 10-ந் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த காமராஜ்(வயது 40), பூவரசன்(22), அன்பு(32), அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்லையன்(52), பாலு(55), செல்லத்துரை(35), முருகானந்தம(42), ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஸ்டீபன்(25), முருகன்(24) ஆகிய 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

பின்னர் மீனவர்களை கைது செய்ததோடு, அவர்கள் வந்த விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து திரிகோணமலை துறைமுகத்துக்கு எடுத்துச்சென்றனர்.

சொந்த ஊர் திரும்பினர்

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 9 பேரையும் கடந்த 26-ந்தேதி இலங்கை அரசு விடுதலை செய்தது.

இதையடுத்து காமராஜ், பூவரசன், அன்பு, செல்லையன், பாலு, ஸ்டீபன், முருகன் ஆகிய 7 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் நேற்று அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்துக்கு வந்தனர்.

செல்லத்துரை, முருகானந்தம் ஆகிய 2 பேர் கொரோனா தொற்றால் இலங்கையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என்று மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்