கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் நாகை விசைப்படகு மீனவர்கள்
மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைவதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
மீன்பிடி தடைகாலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் இன்று (14-ந்தேதி) வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டது.இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட எல்லை வரை சிறியவகை படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.
சீரமைப்பு பணிகள்
மீன்பிடி தடைக்காலத்தையொட்டி நாகை மாவட்டத்தில் 1000 விசைப்படகுகள் கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்த்தல், வர்ணம் தீட்டுதல், என்ஜினை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடலுக்கு செல்ல ஆயத்தம்
இந்தநிலையில் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இதற்காக தங்களது படகுகளை தயார்நிலையில் வைத்துள்ளனர்.மேலும் மீன்பிடிக்க தேவையான வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் ஆழ்கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டி, டீசல், குடிநீர், உணவு பொருட்கள் ஆகியவற்றை படகுகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள். அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் மூலம் பதப்படுத்துவார்கள். இதனால் நாகையில் ஐஸ் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.