நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால், நாகை மீனவர்கள் 7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2022-12-27 18:45 GMT

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால், நாகை மீனவர்கள் 7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்தது. 10 அடி உயரத்துக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்தன. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதன் காரணமாக கடந்த 7 நாட்களாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

மீன்பிடிக்க சென்றனர்

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி வழங்கினர். இதை தொடர்ந்து 7 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். முன்னதாக ஐஸ் கட்டிகள், டீசல், சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைத்திருந்தனர்..

வேதாரண்யம்

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம்,வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாகத்துடன் சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்