நாம் தமிழர் கட்சியினர் கோஷ்டி மோதல்; 2 பேர் படுகாயம்

நாகர்கோவிலில் வரவு- செலவு கணக்கு கேட்ட ஆத்திரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக அதே கட்சியை சேர்ந்த மண்டல செயலாளர் உள்பட 18 பேர் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-04 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வரவு- செலவு கணக்கு கேட்ட ஆத்திரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக அதே கட்சியை சேர்ந்த மண்டல செயலாளர் உள்பட 18 பேர் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரும்பு கம்பியால் தாக்குதல்

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தை சேர்ந்தவர் ஹரிஹர செல்வம் (வயது 34), டிரைவர். இவர் நாம் தமிழர் கட்சியில் 26-வது வார்டு செயலாளராக உள்ளார். இவரையும், நாகர்கோவில் தொகுதி பொருளாளரான மேல காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40) என்பவரையும் நேற்று முன்தினம் இரவு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகேயுள்ள வணிக வளாகம் முன் ஒரு கும்பல் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியது.

இந்த தாக்குதலில் ஹரிஹர செல்வமும், சதீஷ்குமாரும் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

18 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் ஹரிஹர செல்வம் புகார் கொடுத்தார். அந்த புகாரில் 'நானும், சதீஷ்குமாரும் நாங்கள் சார்ந்துள்ள நாம் தமிழா் கட்சியின் வரவு- செலவு கணக்கு தொடர்பாக மண்டல செயலாளர் பெர்லின் ஜோ, தொகுதி செயலாளர் விஜயராகவன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயரின் ஆகியோரிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் வரவு- செலவு விவரங்களை தெரிவிக்காமல் எங்களை தாக்கினர். முதலில் கையால் தாக்கிய அவர்கள் பின்னர் 15 பேரை வரவழைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். மேலும் எங்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். எனவே எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின்பேரில் பெர்லின் ஜோ, விஜயராகவன், ஜெயரின் மற்றும் கண்டால் தெரியும் 15 பேர் என மொத்தம் 18 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்