வாலிபரை கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

வாலிபரை அடித்துக்கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-07-21 18:45 GMT

சிதம்பரம், 

வாலிபர் அடித்துக்கொலை

சிதம்பரம் எம்.கே. தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சவுரிநாதன் (வயது 30). இவர் கடந்த 11.9.2017 அன்று அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான குஞ்சிதபாதம்(54) மற்றும் அவருடைய மனைவி ஜெயந்தி என்கிற சுதந்திரதேவிக்கும், சவுரிநாதனுக்கும் இடையே குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த குஞ்சிதபாதம் சவுரிநாதனை கையால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சவுரிநாதன் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சவுரிநாதன் இறந்தார். இதுகுறித்து சவுரிநாதன் மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிந்து, குஞ்சிதபாதம் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

மேலும் இந்த கொலை வழக்கு சிதம்பரத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில் சவுரிநாதனை அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக குஞ்சிதபாதத்திற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவரது மனைவி ஜெயந்தி என்ற சுதந்திரதேவிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். ஆயுள் தண்டனை பெற்ற குஞ்சிதபாதம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்