மூதாட்டியிடம் நூதன முறையில் கவரிங் நகைகளை பறித்துச் சென்ற மர்மநபர்கள்

கடையநல்லூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் கவரிங் நகைகளை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

Update: 2023-05-03 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் கவரிங் நகைகளை பறித்துச் சென்றனர்.

மூதாட்டி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் பவுண்ட் கீழத்தெருவில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவருடைய மனைவி சரஸ்வதி (வயது 69). இவர் நேற்று முன்தினம் மேல கடையநல்லூர் தேரடித்திடல் அருகே உள்ள பால் பண்ணைக்கு பால் வாங்க சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் டிப்டாப் உடையுடன் 2 மர்மநபர்கள் வந்தனர்.

அவர்கள் சரஸ்வதியை வழிமறித்து, "நாங்கள் போலீஸ். நாடு கெட்டு கிடக்கிறது. தங்க நகைகளை அணிந்து கொண்டு இவ்வாறு சாலையில் செல்லக்கூடாது. சிறிது நேரத்துக்கு முன்புதான் பஸ்நிலையம் அருகே நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை திருடர்கள் அறுத்துக் கொண்டு சென்று விட்டனர். எனவே உங்கள் கழுத்தில் கிடக்கும் சங்கிலி, வளையல்களை கழற்றி கொடுங்கள். நாங்கள் பேப்பரில் வைத்து மடித்து தருகிறோம். அதனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்" எனக்கூறியுள்ளனர்.

கவரிங் நகைகள்

இதனை உண்மை என நம்பிய சரஸ்வதி, தான் அணிந்திருந்த சங்கிலி, வளையல்களை கழற்றி அவா்களிடம் கொடுத்தார். அவர்களும் அதனை வாங்கி ஒரு பேப்பரில் மடித்தனர். பின்னர் அதனை சரஸ்வதியிடம் கொடுத்துவிட்டு அங்கிகிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி, அந்த பேப்பரை திறந்து பார்த்தார். அதில் இருந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. மேலும் சரஸ்வதி அணிந்திருந்த சங்கிலி, வளையல் அனைத்தும் கவரிங் தான் என்பது டிப்டாப் நபர்களுக்கு தெரியவில்லை. ஆனால் சங்கிலியில் அணிந்திருந்த தாலி மட்டும் 5 கிராம் எடையுள்ள தங்கமாகும்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார்.

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்