கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் நின்ற மர்ம கார் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் மர்மமாக நின்ற காருடன் ரத்தக்கறை படிந்த உடையில் இருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-14 19:10 GMT

கண்ணாடி உடைந்த கார்

திருப்பத்தூரிலிருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள கொரட்டி கிராமத்தில் கேரள மாநில பதிவெண் கொண்ட சிவப்பு நிற கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றது. அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதன் மீது மஞ்சள் பொடியும் தூவப்பட்டிருந்தது.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக திருப்பத்தூர் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்றபோது காரில் ஒருவர் இருந்தார். அவர் அணிந்து இருந்த டி-ஷர்ட் கிழிந்து ரத்தக்கறை படிந்து காணப்பட்டது. சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தியபோது தனது பெயர் ஷாகீர்உசேன் (வயது 41), என்றும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோடங்காடு கிராமம் சொந்த ஊர் என்றும் தெரிவித்தார்.

கடத்தினர்

தொடர்ந்து அவர் கூறுகையில் தனது நண்பரான பஷீர் என்பவரை துபாய் செல்ல காரில் பெங்களூருவுக்கு சென்று விமான நிலையத்தில் இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தேன். சேலம் அருகே இனோவா காரை குறுக்கே நிறுத்தி அதில் இருந்தவர்கள் என்னை தாக்கி அதில் ஏற்றினர்.

பின்னர் அதில் இருந்த சிலர் எனது காரில் ஏறிக்கொண்டு அதனை ஓட்டினர். என்னை அவர்கள் வந்த இனோவா காரில் கடத்திச்சென்றனர்.

பின்னர் அவர்கள் என்னை ஒரு இடத்தில் இறக்கி விட்டு உனது கார் 15 கிலோ மீட்டர் தொலைவில் கொரட்டி கிராமத்தில் நிற்கிறது எனகூறி விட்டுச்சென்றனர். நான் ஆட்டோவில் ஏறி எனது கார் நின்ற இடத்துக்கு வந்தேன் என்றார்.

ஆனால் அவர் கூறியதில் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து காரை பறிமுதல் செய்து சேலம் மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

முன்னுக்குப்பின் முரணாக...

இது குறித்து போலீசார் கூறுகையில்,'' காரில் வந்த ஷாகீர்உசேன் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறுகிறார். நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த ஒரு பதிலும் அவரால் கூற முடியவில்லை. தன்னை கடத்திய நபர்கள் யார் என தெரியவில்லை என்றும் கூறி உண்மையை மறைக்கிறார்'' என்றனர். பின்னர் அவரை திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷாகீர்உசேனின் டி-சர்ட்டில் ரத்தக்கறை உள்ளதால் அவரை தாக்கியதால் ரத்தக்கறை ஏற்பட்டதா அல்லது யாரையாவது இவர் கொலை செய்தபோது டி-சர்ட்டில் ரத்தக்கறை படிந்ததா? என்பதும் சந்தேகம் நிலவுகிறது.

மேலும் திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம்.கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா அல்லது தங்கம், ஹெராயின், கோக்கைன், போதைப் பொருட்களை கடத்தி வரும்போது இவரை வழிமடக்கி மர்ம நபர்கள் கார் சீட்டில் பதுக்கி வைத்திருந்த மர்ம பொருட்களை கிழித்து எடுத்துச் சென்றபோது கைரேகை பதிவு மற்றும் மோப்பநாய் மூலம் மோப்பம்பிடிக்க முடியாமல் செய்வதற்காக காரில் மஞ்சள் பொடி தூவப்பட்டதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்