எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து- குருத்திகாவின் கணவர் வினித் பேட்டி

எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று குருத்திகாவின் கணவர் வினித் கூறினார்.

Update: 2023-02-05 18:45 GMT

குருத்திகாவின் கணவர் வினித் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மனைவியை கடத்திச் சென்று ஒரு வாரம் ஆகிறது. அவர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பேசும் வீடியோ, ஆடியோ வெளியாகிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி திருமணம் செய்து கொண்டோம்.

குற்றாலம் போலீஸ் நிலையத்தில் எங்களை ஜனவரி 4-ந் தேதி விசாரிக்கும்போது எங்களது திருமணத்தை அங்கு கூறினோம். அப்போது நவீன் பட்டேல் வீட்டார் 20 பேர் போலீஸ் நிலையத்தில் இருந்தனர். அவர்கள் முன்புதான் நாங்கள் எங்களது திருமணத்தை கூறினோம். அப்போது யாரும் குருத்திகாவிற்கு திருமணமான விஷயத்தை கூறவே இல்லை. ஆனால் இப்போது ஒரு வாரம் கழித்து அவருக்கு திருமணம் ஆனதாக கூறுகிறார்கள். தவறான தகவலை எனது மனைவியை மிரட்டி கூறச்சொல்கிறார்கள். இப்போது ஒரு வீடியோ வந்துள்ளது. அதில் நான் பணம் கேட்பதாக என் மனைவியை மிரட்டி கூற வைத்துள்ளனர். இதை பார்க்கும்போது எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.

அவர் பேசுவது உண்மையாக இருந்தால் ஏதாவது ஒரு போலீஸ் நிலையம் அல்லது நீதிமன்றத்தில் சென்று அவரை பேச சொல்லலாம். அதை விடுத்து அவரை வெளியே விடாமல் வீடியோ வெளியிடுகிறார்கள். நான் இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். ஆனால் நான் வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன். எனது மனைவி நேரில் வர வேண்டும். அப்போது அவர் மனநிலை என்ன? அவர் என்ன கஷ்டத்தை அனுபவித்தார்? என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்