மாநகராட்சி பள்ளியில் பெற்றோர் முற்றுகை

Update: 2022-06-29 15:36 GMT


திருப்பூர் பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி பள்ளி

திருப்பூர் பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 965 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு தலைமையாசிரியை உள்பட 18 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் அதே வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்குவது, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான குழிகள் என ஏராளமான குறைபாடுகள் பள்ளி வளாகத்தில் உள்ளன.

போராட்டம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று காலை பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நிர்வாகிகளுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் இதில் சமரசம் அடையாத பெற்றோர் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி கணேஷ், அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், 13-வது வார்டு கவுன்சிலர் அனுஷ்யா சண்முகம், பள்ளி தலைமையாசிரியை மனோண்மணி ஆகியோர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உறுதி

இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி கணேஷ் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை தலைமையாசிரியை முறையாக கவனிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் காரணமாக பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்