முத்தூர் பகுதியில் சிறு தானியங்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.
சிறுதானியம்
வெள்ளகோவில் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் முத்தூர் பகுதியில் தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம், ஊட்டமிகு சிறு தானியங்கள் உற்பத்தி செய்தல் அவசியம் மற்றும் பயன்பாடுகள், நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரசாரம் நேற்று காலை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுச்சாமி தலைமை தாங்கி வாகன பிரசார பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த வாகனத்தின் மூலம் சிறுதானியங்களின் முக்கியத்துவம், சோளம், கம்பு, ராகி, குதிரைவாலி, வரகு, சாமை, தினை, கேழ்வரகு, பனிவரகு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த உளவியல் முறையில் பயிர் பாதுகாப்பு கடைபிடிக்கும் வழிமுறைகள், உரம், நீர், அறுவடை மேலாண்மை கடைபிடிக்கும் வழிமுறைகள், உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகளின் நன்மைகள் பற்றி ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
தொழில்நுட்பசிறு தானியங்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரம் கையேடு
முடிவில் 2023 சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கும் விதமாக நகர, கிராம பொதுமக்கள், விவசாயிகள் அனைவருக்கும் சிறுதானிய தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது. இதில் வேளாண்மை அலுவலர் செல்வக்குமார், துணை வேளாண்மை அலுவலர் விஸ்வநாதன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சத்தியநாராயணன், நாகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.