முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்ைத கிராம மக்கள் முற்றுகை

முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்ைத கிராம மக்கள் முற்றுகை

Update: 2023-06-10 18:45 GMT

குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்த உடலை அகற்றக்கோரி முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

2 மகள்கள் சாவு

முத்துப்பேட்டையை அடுத்த மேலதொண்டியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். இவர் தான் வசித்து வந்த சொந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் அருகில் உள்ள தில்லைவிளாகத்தில் வசித்து வந்தார். அப்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராஜூன் 2 மகள்களும் இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்களது உடலை ஈமசடங்கு செய்ய மேலதொண்டியக்காடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி, மேலதொண்டியக்காட்டில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள சொந்த இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.

சாலையோரம் மனைவி உடல் புதைப்பு

இதையடுத்து கோவிந்தராஜ் மற்றும் தனது மனைவி சுந்தரம்மாளுடன் அங்கிருந்து வெளியேறி ஜாம்புவானோடை தர்கா அருகே வசித்து வந்தார். இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக சுந்தரம்மாள் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனையடுத்து கோவிந்தராஜ் தனது மகள்களை அடக்கம் செய்த மேலதொண்டியக்காட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது இடத்தில் மனைவியின் உடலையும் அடக்கம் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்றுமுன்தினம் மாலை அவருக்கு சொந்தமான இடத்தின் முன் பகுதியில் சாலையோரம் 2 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி அடக்கம் செய்து விட்டு சென்றுவிட்டார். சாலையோரம் பிணம் அடக்கம் செய்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி கிராமமக்கள் இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

முற்றுகை போராட்டம்

அதில் குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்த ஆழத்தில் உள்ளதால் நாய்கள் உடலை தோண்ட வாய்ப்புகள் உள்ளது. எனவே சாலையோரம் அடக்கம் செய்துள்ள உடலை உடனடியாக எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நேற்று அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது உடனடியாக குடியிருப்பு பகுதி சாலையோரம் அடக்கம் செய்துள்ள உடலை எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதையடுத்து முற்றுகையிட்ட கிராம மக்களிடம் தாசில்தார் மகேஷ்குமார், உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்