சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு பழம்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 6-ம் வெள்ளி விழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கண்ணனூர் நகருக்கு இரவு 8.30 மணிக்கு எடுத்து சென்றனர்.
அங்கு உள்ள அனைத்து தெருக்களிலும் முத்துமாரியம்மன் வீதி உலா நடந்தது. தெருக்களில், மா இலை தோரணம் கட்டி, கோலம் போட்டு அம்மனை வரவேற்றனர்.
தாய் வீட்டுக்கு வந்த முத்துமாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் 21 சீர்வரிசை கொண்டு வந்து வைத்து தாய் வீட்டு சீதனம் செய்தனர்.
இதையடுத்து முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. பம்பை, உடுக்கை, நாதஸ்வர இசையுடன் பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய வரங்கள் கேட்டனர்.
அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் சமபந்தி விருந்து நடந்தது. பின்னர் தாய் வீட்டில் இருந்து முத்து மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வைத்து சீர்வரிசையுடன் ஊர்வலமாக சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அப்போது வாணவேடிக்கை, டிரம்ஸ் ஆகியவையுடன் பக்தர்கள் ஆடிப்பாடி வந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கண்ணனூர் நகர் விழா குழுவினர் செய்திருந்தனர்.