திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை
6 நகராட்சிகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 10 மணி நேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 நகராட்சிகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, 10 மணி நேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட 6 நகராட்சிகளில் 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ், இ.பி.எப். பிடித்தத்தில் ஒப்பந்ததாரர்களின் பங்கு தொகை, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இதுதொடர்பாக திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரை 2 முறை சந்தித்து தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இயக்குனர் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி வந்த அரசாணையை நிறைவேற்றக் கோரியும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் நேற்று காலை திருப்பூர் குமார்நகர் பகுதியில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்த தொழிலாளர்கள் குமார்நகர்-பி.என்.ரோடு பிரதான சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று மண்டல இயக்குனர் அலுவலகத்தின் முன்பகுதியில் தரையிலும், சாலையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலக அதிகாரிகள் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மாலை வரை நடைபெற்ற இந்த போராட்டத்தின் முடிவில் போலீஸ் உதவி கமிஷனர், அனைத்து நகராட்சி கமிஷனர்கள், ஒப்பந்ததாரர்கள், சங்க பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஊதிய உயர்வு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி 15 நாட்களுக்குள் முடிவு தெரிவிப்பது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகராட்சி கமிஷனர்கள் வெளிகொணர்வு ஒப்பந்ததாரர்களுக்கு உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுப்பது, பணி நிரந்தரம் தொடர்பாக அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு, ஒப்பந்தமாக அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னரே தொழிலாளர்கள் 10 மணி நேர போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் மாவட்ட தலைவர் மூர்த்தி, சி.ஐ.டி.யு. தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், தேவராஜ் உள்பட 6 நகராட்சிகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.