கொலை செய்யப்பட்டகிராமநிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி.-அமைச்சர்கள் ஆறுதல்

முறப்பநாடு அருகே கொலை செய்யப்பட்ட கிராமநிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி.-அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.

Update: 2023-04-25 18:45 GMT

கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

கனிமொழி எம்.பி. ஆறுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். இவர் நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்தபோது 2 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து லூர்து பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். பின்னர் அவர்களும், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் லூர்து பிரான்சிஸ் மகன்கள் அஜேய் ஆல்வின், மார்ஷல் ஏசுவடியான் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

விருது வாங்கியவர்

அப்போது மார்ஷல் ஏசுவடியான், 'எனது தந்தை நேர்மையாக பணியாற்றியதற்காக சிறந்த கிராம நிர்வாக அலுவலர் விருது வாங்கியவர். அவரை இப்படி கொலை செய்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை' என கூறி கதறி அழுதார். அவரை கனிமொழி எம்.பி. ஆசுவாசப்படுத்தி, 'உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் அதனை செய்ய அரசு தயாராக உள்ளது' என்று கூறினார்.

அப்போது அருகில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள், 'எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர்கள் ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), சரவணன் (நெல்லை), தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

ஆழ்ந்த இரங்கல்

முன்னதாக கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த சம்பவம் யாரும் எதிர்பாராத விதத்தில் நடந்து உள்ளது. இனி இதுபோன்று யாருக்கும் நடக்கக்கூடாது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதிஉதவி அறிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் ெதாடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.

இதற்கிடையே, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் மகன்களிடம் ஈமச்சடங்கிற்காக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்