பெண் சரமாரி வெட்டிக்கொலை; நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்

வத்தலக்குண்டு அருகே நடத்தை சந்தேகத்தால் பெண்ணை, அவரது கணவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

Update: 2022-09-13 16:56 GMT

வத்தலக்குண்டு அருகே நடத்தை சந்தேகத்தால் பெண்ணை, அவரது கணவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

வெட்டிக்கொலை

வத்தலக்குண்டு அருகே உள்ள குன்னுவாரன்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 46). இவர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி அஞ்சுலட்சுமி (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அஞ்சுலட்சுமியும், அப்பகுதியில் உள்ள மற்றொரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் அஞ்சுலட்சுமியின் நடத்தை மீது செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தனது மனைவியிடம் செல்லப்பாண்டி கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று காலை மீண்டும் செல்லப்பாண்டி, தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து, மனைவி என்றும் பாராமல் அஞ்சுலட்சுமியை சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து போன அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

போலீசில் சரண்

பின்னர் செல்லப்பாண்டி விருவீடு போலீஸ் நிலையத்திற்கு சென்று, தனது மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், விருவீடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

பின்னர் அஞ்சுலட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தை சந்தேகத்தால் மனைவியை கணவரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் குன்னுவாரன்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்