தனியாக வசித்த முதியவர் கொலை?
குடியாத்தம் அருகே தனியாக வசித்த முதியவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். வீட்டில் இருந்த நகை- பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குடியாத்தம் அருகே தனியாக வசித்த முதியவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். வீட்டில் இருந்த நகை- பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதியவர் மர்மச்சாவு
குடியாத்தத்தை அடுத்த ஒலகாசி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 92). இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அண்ணாமலையின் மனைவி சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் அண்ணாமலை மட்டும் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலையை அவரது உறவினர் மகள் சித்ரா தினமும் கவனித்து வந்துள்ளார். அண்ணாமலைக்கு இரவு உணவு கொடுக்க சித்ரா சென்றபோது, வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருட்டாக இருந்தது. அண்ணாமலை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்துள்ளார்.
நகை- பணம் கொள்ளை
இதுகுறித்து சித்ரா அவரது உறவினர்களுக்கும், மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் அவரது உறவினர்களும், மகள்களும் விரைந்து வந்து நேற்று காலையில் அண்ணாமலையின் உடலை வைக்க பிரீசர் பெட்டி வரவைக்கப்பட்டு அதற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றபோது பீஸ் கேரியர் பிடுங்கப்பட்டிருந்தது. யாரோ பீஸ் கேரியர் பிடுங்கி மின் தடை செய்துள்ளது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவரது மகள்கள் வீட்டில் சோதனை செய்தபோது பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன. அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை, பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலையின் மூத்த மகள் மகேஸ்வரி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது தந்தை அண்ணாமலையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை எனவும் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை
அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அண்ணாமலையின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணாமலையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மர்மமான முறையில் அண்ணாமலை இறந்த வீட்டில் வேலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர் மேலும் திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் மியா கொண்டு வரப்பட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றது.
முதியவர் அண்ணாமலை தனியாக வசிப்பதை கவனித்து மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.