மொட்டை மாடியில் தூங்கிய வாலிபரை முகத்தை சிதைத்து ெகான்ற கும்பல்

மொட்டை மாடியில் படுத்து தூங்கிய வாலிபரை சரமாரியாக வெட்டியதுடன், முகத்தை சிதைத்து கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2022-11-01 18:45 GMT

மொட்டை மாடியில் படுத்து தூங்கிய வாலிபரை சரமாரியாக வெட்டியதுடன், முகத்தை சிதைத்து கொன்றுவிட்டு தப்பிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

வழக்குகளில் தொடர்புடையவர்

சிவகங்கையில் காமராஜர் காலனியை சேர்ந்தவர் சித்திரைச்சாமி. இவருடைய மகன் ஆகாஷ் (வயது 25). இவர் மீது சிவகங்கை நகர், தாலுகா, மானாமதுரை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கொள்ளை உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகாஷ், கோவையில் தங்கி இருந்தார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆகாஷ் சிவகங்கை வந்தார். பின்னர் அவர் தன்னுடைய நண்பரான சிவகங்கையை அடுத்த மட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த சுந்தரபாண்டியுடன் (28) தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஆகாஷ், சுந்தரபாண்டியின் வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கினார்.

முகத்தை சிதைத்து கொலை

நள்ளிரவில் ஒரு கும்பல் அங்கு வந்து சுந்தரபாண்டியை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் ஆகாசை அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ஆகாஷ் முகம் சிதைந்தது. படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆகாஷ் உடலை பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

முன்விரோதம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

ஆகாஷ்க்கும், மட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. இதன்காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்