பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் இளங்கோ (வயது 40). நேற்று முன்தினம் இரவு இவருக்கு கற்களை கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இளங்கோ, மெணசி-குண்டல்மடுவு சாலையில் காளியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அந்த வழியாக கற்களை ஏற்றி வந்த டிராக்டரை அவர் நிறுத்த முயன்றார். அப்போது டிராக்டரை ஓட்டி வந்தவர், அதனை இளங்கோ மீது ஏற்றி கொல்ல முயன்றார். சுதாரித்து கொண்ட இளங்கோ ஓரமாக சென்று தப்பினார். மேலும் இதுகுறித்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற ராகவன் மற்றும் தம்பிதுரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கற்கள் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.