கிருஷ்ணகிரியில், வீட்டில் தனியாக இருந்தபெண் கழுத்தை நெரித்துக்கொலைரூ.35 லட்சம் கொள்ளை போனதா? போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார். ரூ.35 லட்சத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விதவை
கிருஷ்ணகிரியில் உள்ள சென்னை சாலை தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 51). கணவரை இழந்தவர். குழந்தைகள் இல்லை. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சரஸ்வதி வீட்டில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. மேலும் வீட்டின் வெளிப்புற பூட்டும் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சரஸ்வதி பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கழுத்தை நெரித்துக்கொலை
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சரஸ்வதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
ரூ.35 லட்சம் கொள்ளை?
கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு சொந்தமான இடம் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ளது. அந்த இடத்தை ரூ.36 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதற்காக ரூ.1 லட்சம் முதலில் முன்பணம் வாங்கிய சரஸ்வதி நேற்று முன்தினம் மீதி தொகையான ரூ.35 லட்சத்தை வாங்கி உள்ளார்.
தொன்னையன் கொட்டாயில் வாடகை வீட்டில் இருந்த அவர், அருகிலேயே புதிதாக வீடு ஒன்றும் கட்டி வந்தார். இந்த நிலையில் தான் சரஸ்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் வீட்டில் இருந்த ரூ.35 லட்சத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சரஸ்வதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.