ஆடு மேய்க்க சென்ற பெண் நகைக்காக கொலை

சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றனர்.

Update: 2022-10-15 18:45 GMT

சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த நகையை திருடி சென்றனர்.

ஆடு மேய்க்க

சிவகங்கை அடுத்துள்ள காராம்போடை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னக்காளை. இவரது முதல் மனைவி மீனாள் (வயது 70). இவருக்கு குழந்தை இல்லாததால் மீனாளின் சகோதரி செல்லம்மாவை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவருக்கு தவச்செல்வம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் காலை மீனாள், ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.

ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் தவச்செல்வம் தனது பெரியம்மாவை பல்வேறு பகுதியிலும் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூதாட்டி கொலை

இந்நிலையில் நேற்று மீண்டும் தவச்செல்வம், மீனாளை தேடினார். அப்போது அவருடைய வீட்டின் அருகேயுள்ள சிதிலமடைந்த வீட்டின் ஒரு பகுதியில் மீனாள் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்து, காதுகளில் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது. அவர் மீது மண்ணை போட்டு பாதி மூடிய நிலையில் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தவச்செல்வம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சிபசாய் சவுந்தர்யன், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பரபரப்பு

மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மூதாட்டி எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? என தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் எப்படி கொலைசெய்யப்பட்டார் என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்