மத்திகிரி அருகே பெண் அடித்துக்கொலை போலீசார் விசாரணை

மத்திகிரி அருகே பெண் அடித்துக்கொலை போலீசார் விசாரணை;

Update: 2022-09-06 17:41 GMT

மத்திகிரி:

மத்திகிரி அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கலுகொண்டப்பள்ளி சுபாஷ் நகரை சேர்ந்தவர் நாகப்பா. இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி ஆஞ்சினம்மா என்ற மேரி (வயது 43). அவர் அந்த பகுதியில் சுமார் 1½ ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

மேலும் அந்த பகுதியில் உள்ள இரும்பு குடோன் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஆஞ்சினம்மா இரவு வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று விட்டார்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் அவரது வீட்டு கதவு நேற்று காலை திறந்த நிலையில் இருந்தது. அப்போது பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த லகிஷா என்பவர் அங்கு சென்று பார்த்தார். அங்கு ஆஞ்சினம்மா தலையில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை மண்வெட்டியை கொண்டு கொடூரமாக அடித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மத்திகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆஞ்சினம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை யார் கொலை செய்தார்கள்? என தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் கலுகொண்டப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்