ஓசூரில் பட்டப்பகலில் பயங்கரம்:விவசாயி சரமாரி வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-07-08 19:30 GMT

ஓசூர்:

ஓசூரில் பட்டப்பகலில் விவசாயியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியை சேர்ந்தவர் சிவராமப்பா (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி கோபம்மா. இவர்களுக்கு மது (22) என்ற மகனும், சைத்ரா (20) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். சிவராமப்பா தனது வீட்டின் அருகே பசு மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சிவராமப்பா வழக்கம்போல் பால் கறந்து விட்டு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் பசு மாடுகளுக்கு புற்கள் அறுக்க வேனில் சென்றார். பின்னர் புற்களை அறுத்து கட்டு கட்டி அதனை வேனில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். காலை 9.30 மணி அளவில் பழைய ரோஸ் கார்டன் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து கொண்டு 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென சிவராமப்பா வந்த வேனை வழிமறித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் வேனில் இருந்த சிவராமப்பாவை வெளியே இழுத்து அவருடைய கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு தாங்கள் மறைத்து கொண்டு வந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிவராமப்பா ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த 2 பேரும் சாவகாசமாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இந்த பயங்கர கொலை சம்பவத்தை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவராமப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் கொலை நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பரபரப்பு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிவராமப்பாவிற்கும், அவருடைய உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சிவராமப்பாவிற்கு சாதகமாக தீர்ப்பு வர உள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

எனினும் இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓசூரில் பட்டப்பகலில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்