திருப்பூர் அருகே பா.ஜ.க. பிரமுகரை பொக்லைனை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முதல்-அமைச்சருக்கு மனு
திருப்பூர் அருகே பொங்கலூர் மில் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45). இவர் பா.ஜனதா ஓ.பி.சி. பிரிவின் மண்டல தலைவராக உள்ளார். இவர் அந்தப்பகுதியில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த வழியாக செல்லும் சாலையை கடந்து அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் குழாய் மூலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இடத்தின் உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
அதன் பின்பும் அந்த இடத்திலேயே கழிவுநீர் சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தின் உரிமையாளர் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அந்த மனுவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
கழிவுநீர் பாதை அடைப்பு
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் மாலை பொங்கலூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி லட்சுமணன், ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் தொட்டம்பட்டியைச் சேர்ந்த பொக்லைன் உரிமையாளர்கதிரவன் மற்றும் டிரைவர் வசந்த் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கழிவுநீர் பாதையை அடைத்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த செல்வகுமார், உங்களை யார் இதை செய்யச் சொன்னது என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பொக்லைன் எந்திரத்தை எடுக்க விடாமல் தடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் அங்கிருந்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி லட்சுமணன் மற்றும் ஊராட்சி செயலாளர்சிவக்குமார் ஆகியோர்அலுவலகத்திற்கு திரும்பி வந்து விட்டனர்.
காயம்
பின்னர் பொக்லைனை அங்கிருந்து எடுத்து செல்ல முயன்றபோது, செல்வகுமார் பொக்லைன் எந்திரத்தின் முன்புறம் நகராமல் நின்றார். பொக்லைனை முன்னோக்கி இயக்க, செல்வகுமார் வாகனத்தை கையால் பிடித்தபடி பின்னோக்கி நடந்து சென்றார். இதில் அவருக்கு வாய் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்துஅருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
6 பேர் மீது வழக்கு
இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் செல்வகுமார் புகார் அளித்தார். அதன் பேரில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி லட்சுமணன், பொங்கலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் சிவக்குமார், பொக்லைன் உரிமையாளர் கதிரவன், டிரைவர் வசந்த் ஆகிய 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தால் பொங்கலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.