கட்டிட தொழிலாளியை அடித்துகொலை செய்த நண்பர் கைது

Update: 2022-12-23 16:10 GMT


வெள்ளகோவிலில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட தொழிலாளி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பாரதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 60). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இதனால் தண்டபாணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவரும், இவருடைய நண்பரான பக்கத்து வீட்டை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வம் என்கிற செல்லமுத்தும் (45) சேர்ந்து அடிக்கடி மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் வைத்து மது அருந்தினர். போதை தலைக்கு ஏறியதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த செல்லமுத்து அருகில் கிடந்த கட்டையை எடுத்து தண்டபாணியை கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் தண்டபாணி மயங்கி கிடந்தார். நீண்டநேரமாக அவர் எழுந்திருக்காததால் உறவினர்கள் அருகில் வந்து பார்த்தபோது, தண்டபாணி இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தண்டபாணியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்