5 பவுன் நகைக்காக மூதாட்டியை கழுத்து அறுத்து கொன்ற முதியவர் கைது

Update: 2022-12-22 16:13 GMT


திருப்பூரில் மூதாட்டியை கொலை செய்து 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். வீட்டிலேயே தங்கியிருந்தவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி கொலை

திருப்பூர் எஸ்.வி.காலனி ஓம் சக்தி கோவில் ரோடு டி.எஸ்.ஆர். லே அவுட் 8-வது வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 76). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி சந்திராமணி (67). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் அதிகாலையில் சந்திராமணி வீட்டின் சமையலறையில் பணியில் ஈடுபட்டு இருந்தார். முத்துசாமி ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். ஏதோ சத்தம் கேட்டு எழுந்த முத்துசாமி சமையலறைக்கு சென்றபோது அங்கு ரத்த வெள்ளத்தில் சந்திராமணி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்..

சேலத்தை சேர்ந்தவர்

தகவல் அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் மற்றும் வடக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் முத்துசாமியின் வீட்டுக்கு அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்த சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஆறுமுகம் (63) அதிகாலை நேரத்தில் முத்துசாமியின் வீட்டில் இருந்து வெளியே சென்றது தெரியவந்தது.

அவரிடம் விசாரணை நடத்த தேடிய போது ஆறுமுகத்தை காணவில்லை. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்த ஆறுமுகத்தை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பணத்துக்கு ஆசைப்பட்டு சந்திராமணியை ஆறுமுகம் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

முதியவர் கைது

முத்துசாமியிடம் பேசுவதற்காக அவருடைய வீட்டுக்கு ஆறுமுகம் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். சில நேரங்களில் அவருடைய வீட்டில் ஆறுமுகம் சாப்பிட்டும் வந்துள்ளார். முத்துசாமியின் வீட்டில் தனியாக அறைகள் இருப்பதால் சில நாட்களில் ஆறுமுகம் அந்த அறையில் தங்கி செல்வது வழக்கம். சம்பவத்தன்று இரவும் அந்த அறையில் தங்கியிருந்தவர், அதிகாலையில் எழுந்து சமையலறையில் இருந்த சந்திராமணி அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்துள்ளார்.

அவர் சத்தம் போட்டதும் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்து சமையலறையில் இருந்த கத்தியால் சந்திராமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். சேலத்துக்கு சென்ற அவர், சங்கிலியை தெரிந்த நபரிடம் கொடுத்து வைத்துள்ளார். அதற்குள் போலீசார் அவரை பிடித்து நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆறுமுகத்தை நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆதரவு இல்லாமல் இருந்த ஆறுமுகத்துக்கு சாப்பாடு போட்டு தனது வீட்டிலேயே முத்துசாமி தங்க வைத்திருந்தார். ஆனால் பணத்துக்காக ஆசைப்பட்டு அவருடைய மனைவியை கொலை செய்து நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்படையினருக்கு பாராட்டு

கொலை சம்பவம் நடந்த 9 மணி நேரத்துக்குள் கொலையாளியை தனிப்படை போலீசார் பிடித்தனர். இதையடுத்து தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டினார

மேலும் செய்திகள்