மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும்- நகரசபை தலைவர்
மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என திருத்துறைப்பூண்டி நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நகரசபை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பிரபாகரன், துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
உஷா சண்முகசுந்தரம் (அ.தி.மு.க.):-
திருத்துறைப்பூண்டி உப்புக்குள தெரு பகுதிக்கு குடிநீர் சரியாக வருவதில்லை. அதை சரி செய்து தர வேண்டும்.
எமல்டாமாயா (தி.மு.க.):-
திருத்துறைப்பூண்டி கழுவமுனி தெரு பகுதியில் சாக்கடையை சரி செய்ய வேண்டும்.
கார்த்தி (தி.மு.க.):-
பாரதியார் தெரு பகுதியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
புதிய கட்டிடங்கள்
ராஜேந்திரன் (காங்கிரஸ்):-
திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெரு பகுதியில் உள்ள பாழடைந்த அரசு கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்.
எழிலரசன் (காங்கிரஸ்):-
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கும் அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இன்றி குடிநீர் வழங்குவதை நிறுத்துகிறார்கள். நகரசபைக்கு உரிய தகவல் தெரிவித்த பின்பு குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தாஜுதீன் (சுயேச்சை):-
சண்முகம் செட்டித்தெரு பகுதியில் சாக்கடைகள் சரி செய்து தர வேண்டும்.
ஜெயபிரகாஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-
24-வது வார்டு பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
இணைப்பு துண்டிப்பு
நகரசபை தலைவர்:-
மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதால் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. உரிய ஆய்வுகளை மேற்கொண்டு மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுபவர்களிடம் இருந்து மோட்டாரை பறிமுதல் செய்வதுடன், குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் வடிகால், சாலை வசதிகள், குளங்கள் தூர்வாருதல், காய்கறி மார்க்கெட் கட்டுதல், பழைய பஸ் நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.38 கோடியே 99 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.