தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி: சங்க உறுப்பினர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை
தெற்குப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்க உறுப்பினர்களிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விவசாயம் செய்ய கடனுதவி
கரூர் மாவட்டம், நெய்தலூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்குப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சேப்ளாப்பட்டி, நெய்தலூர் காலனி, பனையூர், கவண்டம்பட்டி, தெற்குப்பட்டி ஆகிய கிராம பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்கின்றனர்.
இந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு விவசாயம் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. அதுபோல ஆடு மாடுகளுக்கும் மானியம் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகள் பலர் முறையான ஆவணங்கள் கொடுத்து கடன் தொகை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்தத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக உள்ள பலருக்கு கூட்டுறவு சார் பதிவாளர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆஜராக உத்தரவு
அதில் தெற்குப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் மற்றும் இதர கடன்கள் பெறுவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மை தன்மை கண்டறியும் பொருட்டு 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் சட்டப்பிரிவு 81 கீழ் விசாரணை செய்ய விசாரணை அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளரான தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தெற்குப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தாங்கள் குத்தகை சாகுபடி செய்திட தாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள பயிர் கடன் குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே உரிய ஆவணங்களுடன் குளித்தலையில் உள்ள குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.3 கோடிக்கு மேல் மோசடி
இதையடுத்து நேற்று குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- தெற்குப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களில் போலி ஆவணங்கள் கொடுத்தும், முத்திரைகள் கையொப்பங்கள்யிட்டும் அந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலர்களின் ஒத்துழைப்புடன் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் பண மோசடி நடந்துள்ளது. இதுபோல் அருகில் உள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பெயர்களில் இந்த கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கப்பட்டதாகவும் மோசடி நடந்துள்ளது.
ேமாசடி ெதாடர்பாக விசாரணை
அதிலும் உச்ச நிலையாக 2020-ம் ஆண்டு உயிரிழந்த ஒருவரின் பெயரில் 2022-ம் ஆண்டு அவர் கடன் பெற்றது போல் போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு வழிகளில் போலியான ஆவணங்கள் மூலம் பண மோசடி நடந்துள்ளது. ஆனால் போலியாக ஆவணங்கள் தயாரித்து பண மோசடி செய்த நபர்களையோ கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களையோ விசாரிக்காமல் கடன் பெறாத தங்களை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். தங்களை விசாரிப்பதை விட மோசடி செய்தவர்களை விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று வந்த நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக பல உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.