மந்த கருப்பண்ணசாமி கோவிலில் முளைப்பாரி திருவிழா
திருமுல்லைவாசலில் மந்த கருப்பண்ணசாமி கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மந்த கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் காளியம்மன், ஏழைக்காத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் முளைப்பாரிகளை வளர்த்து வந்தனர். விழாவையொட்டி தங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்து கோவிலில் வைத்து கும்மியடித்து பாட்டு பாடினார். பின்னர் ஊர்வலமாக சென்று திருமுல்லைவாசல் கடற்கரையில் விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.