குளித்தலை காவிரி ஆற்றில் முகூர்த்தக்கால் நட்டு தைப்பூச திருவிழா தொடங்கியது.
குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் முகூர்த்தக்கால் நட்டு தைப்பூச திருவிழா தொடங்கியது.;
தைப்பூச திருவிழா
தைப்பூச திருநாள் அன்று கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்சுனேசுவரர், கருப்பத்தூர் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுவரர், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்சுனேசுவரர், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமௌலீசுவரர், வெள்ளூர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் ஆகிய 8 கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்படும்.
கொரோனா ஊரடங்கு
பின்னர் காவிரி ஆற்றில் 8 ஊர் சுவாமிகளின் தீர்த்தவாரி நடத்தப்படும். தைப்பூச நாளில் இந்த 8 ஊர் சாமிகளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். 2 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தைப்பூசதினத்தன்று 8 ஊர் கோவில் சுவாமிகளும் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் கூடி அடுத்த நாள் காலை அனைத்து சுவாமிகளும் கலைந்து அந்தந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுவர். பல ஆண்டுகளாக இந்த திருவிழாவை குளித்தலையில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தைப்பூசத் திருவிழா நடத்தப்படவில்லை. அந்தந்த கோவில்களுக்குள்ளேயே சுவாமிகளுக்கு தீர்த்தவாரி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டதன் காரணமாக கோவிலுக்கு உள்ளே தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இந்த நிலையில் நடபாண்டு குளித்தலையில் தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 4-ந்தேதி கூடி 5-ந்தேதி நிறைவடைய உள்ளது.
சிறப்பு பூஜைகள்
இந்த விழா நடத்தப்படுவதற்கு அச்சாரமாக குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் 8 ஊர் சுவாமிகள் வைப்பதற்காக பந்தல் போடும் பொருட்டும், திருவிழா தொடங்கப்படுவதற்கும் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குளித்தலை கடம்பவனேசுவரர் மற்றும் திருஈங்கோய்மலை ஆகிய 2 கோவிலில் இருந்து அர்ச்சகர்கள் நேற்று காலை குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதிக்கு வந்திருந்தனர். பின்னர் முகூர்த்த கால்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பூஜைகள் முடிந்த பின்னர் திருஈங்கோய்மலை கோவில் சாமி வைப்பதற்கு தனி இடத்திலும், அது தவிர கடம்பவனேசுவரர் உள்ளிட்ட 7 ஊர் சுவாமிகள் ஒரே இடத்தில் வைப்பதற்கு மற்றொரு இடத்திலும் முகூர்த்த கால்கள் ஊன்றப்பட்டன. குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் செயல் அலுவலர் நித்யா மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முசிறி, குளித்தலை நீலமேக பெருமாள் கோவில் செயல் அலுவலர்கள் வித்யா, சங்கர், கோவில் அலுவலர்கள் அர்ச்சகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்
தைப்பூசத் திருவிழாவையொட்டி பிப்ரவரி 4-ந் தேதி மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் தீர்த்தவாரி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குளித்தலையில் தைப்பூச திருவிழா நடைபெறும்போது என்னென்ன பணிகளை எந்தெந்த துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.