ஏப்ரல் மாத நூல் விலையில் மாற்றமில்லை

Update: 2023-04-01 10:08 GMT


திருப்பூரில் ஏப்ரல் மாத நூல் விலையில் மாற்றமில்லை. கடந்த மாத நூல் விலையே தொடர்கிறது. 3 மாதங்களாக நூல் விலை உயராமல் அப்படியே இருப்பது பின்னலாடை தொழில்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.

பின்னலாடை தொழில்

பனியன் தொழில் நகரான திருப்பூரில் பருத்தி ஆடைகள் உற்பத்தி நடக்கிறது. பின்னலாடை உற்பத்திக்கு பருத்தி நூல் முக்கிய மூலப்பொருளாகும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்ததும் பனியன் உற்பத்தியாளர்கள் மொத்தமாக நூல் எடுத்து ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நூல் விலை மாதந்தோறும் 1-ந் தேதி நூற்பாலைகள் அறிவிப்பது வழக்கம்.

நூல் விலை உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் அடிப்படையில் ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நூல் விலை அபரிமிதமாக உயர்ந்ததால் புதிய ஆர்டர் எடுத்து செய்வதில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டினார்கள். பனியன் தொழில் மந்த நிலையை அடைந்தது. அதன்பிறகு நூல் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருப்பதால் பனியன் ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது.

நூல் விலையில் மாற்றமில்லை

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலை அறிவிக்கப்பட்டது. கடந்த மாத நூல் விலையே தொடரும் என்று நூற்பாலைகள் அறிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் மாற்றமில்லை. மார்ச் மாதத்துக்கான நூல் விலையும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 3 மாதமாக நூல் விலையில் மாற்றமில்லாமல் அப்படியே உள்ளது. இது பனியன் தொழில்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது. புதிய ஆர்டர்களை தயக்கமின்றி எடுத்து செல்ல உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஒரு கிலோ கோம்டு ரகம் 20-ம் நம்பர் நூல் ரூ.255-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும் விற்பனையானது. செமி கோம்டு நூல் 20-ம் நம்பர் ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்