எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடங்கியது

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

Update: 2023-07-31 19:52 GMT

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

மாணவர் சேர்க்கை

2023- 2024-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வில் மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது.

இந்த பிரிவுகளின் கீழ் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நேற்று மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்களுக்கு உடல்தகுதி, கண் பரிசோதனை, உயரம், எடை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.

முன்னதாக மாணவர்களின் கல்வி தகுதி சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான உத்தரவு அட்டை வழங்கப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மாணவர்களுக்கு வழங்கினார்.

7.5 சதவீதம் இடஒதுக்கீடு

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் கூறும் போது, நெல்லை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க 250 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 38 மாணவர்களுக்கும், தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 16 மாணவர்களுக்கும் இன்று (அதாவது நேற்று) முதல் மாணவர் சேர்க்கை பணி தொடங்கியது. முதல்நாளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு மாணவரும், தமிழக அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 3 மாணவர்களும், மாற்றுத்திறன் மாணவர்கள் 2 பேரும் சேர்ந்துள்ளனர். இந்த பணி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. பிற பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை வருகிற 4-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 2-வது கட்ட கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும் நடக்கிறது. மாநில அளவிலான மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட கலந்தாய்வு தமிழக அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்