நீலகிரி தேயிலைத்தூளை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

நீலகிரி தேயிலைத்தூளை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

Update: 2023-05-31 21:45 GMT

கோத்தகிரி

நீலகிரி தேயிலைத்தூளை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு ஆஸ்திரேலியா சபாநாயகர் பேசினார்.

தேயிலை தொழிற்சாலை

நாட்டின் கலாசாரம் மற்றும் இங்குள்ள கல்வித்தரம் குறித்து தெரிந்து கொள்ள மேற்கு ஆஸ்திரேலியா நாட்டின் சட்டமன்ற பெண் சபாநாயகர் மிட்செல்லி ராபர்ட்ஸ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டேவிட் ஹனி, டேவிட் ஸ்கைப் மற்றும் இந்திய வம்சாவளியான நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மேற்கு ஆஸ்திரேலியா எம்.எல்.ஏ. ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் கோத்தகிரிக்கு வருகை தந்தனர்.

பின்னர் அவர்கள் கன்னேரிமுக்கு பகுதியில் உள்ள ஜான் சல்லிவன் நினைவகத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள ஜான் சல்லிவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தநிலையில் நேற்று பெண் சபாநாயகர் மிட்செல்லி ராபர்ட்ஸ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டேவிட் ஹனி, டேவிட் ஸ்கைப், ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டனர்.

தொழில்நுட்ப உதவிகள்

அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படும் முறை குறித்து கேட்டறிந்தனர். கிரீன் டீ, ஒயிட் டீ, சி.டி.சி., லீப் டீ உள்ளிட்ட வகை தேயிலைத்தூள்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெண் சபாநாயகர் மிட்செல்லி ராபர்ட்ஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்திற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் பிரதானமாக உள்ளது. ஆனால், பச்சை தேயிலை மற்றும் தேயிலைத்தூளுக்கு போதுமான விலை கிடைப்பது இல்லை. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளை இடைத்தரகர்கள் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். மேலும் தமிழகம் மற்றும் ஆஸ்திரேலிய நல்லுறவு மேம்படவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் 250 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

பாரம்பரிய உடையணிந்தனர்

இதையடுத்து ஒன்னதலை கிராமத்தில் கலாசார விழா நடந்தது. விழாவில் பெண் சபாநாயகர் மிட்செல்லி ராபர்ட்ஸ் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிவித்து கவுரப்படுத்தினர்.

அப்போது சபாநாயகர் படுக மொழியில் நலமாக இருக்கீங்களா என பேசினார். முன்னதாக அவர்கள் சென்னை, கோவையில் நடந்த கருத்தரங்குகளில் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்