வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்
கர்நாடகாவில் சாலையில் போடப்பட்ட கொள்ளு செடிகளால் தீப்பிடித்து கார் எரிந்தது. இதனால் நீலகிரியில் இருந்து கர்நாடகா செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்,
கர்நாடகாவில் சாலையில் போடப்பட்ட கொள்ளு செடிகளால் தீப்பிடித்து கார் எரிந்தது. இதனால் நீலகிரியில் இருந்து கர்நாடகா செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
சாலையில் கொள்ளு செடிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் வழியாக மைசூரு, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதே போல் கேரள மாநிலம் மலப்புரம், திருச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் குண்டல்பெட் தாலுகா ஹென்னகவுடனஹள்ளி - கோபாலபுரா சாலையில் நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது. அதில் 7 வாலிபர்கள் இருந்தனர். மேலும் சாலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த கொள்ளு செடிகளை அறுத்து காய வைப்பதற்காக சாலைகளில் பரப்பி வைத்திருந்தனர். அதன் மீது காரை ஓட்டிச் சென்ற போது கொள்ளு செடிகள் காரின் சக்கரங்களுக்குள் சிக்கியது.
போலீசார் அறிவுரை
பின்னர் திடீரென கார் தீப்பிடித்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து காரில் இருந்த வாலிபர்கள் வெளியே ஓடி தப்பித்தனர். தகவல் அறிந்த குண்டல்பெட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே கார் முழுமையாக எரிந்து நாசமானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குண்டல்பெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, குண்டல்பேட் பகுதியில் உள்ள சாலைகளில் கொள்ளு செடிகள் காய வைக்கப்படுகிறது. இது எளிதில் தீப்பிடிக்கும் என்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க டிரைவர்கள் தங்களது வாகனங்களை கவனமுடன் ஓட்ட வேண்டும் என்றனர்.