திறந்தவெளியில் நிறுத்தப்படும் மோட்டார்சைக்கிள்கள் திருட்டு போகும் அவலம்

திறந்தவெளியில் நிறுத்தப்படும் மோட்டார்சைக்கிள்கள் திருட்டு போகும் அவலம்

Update: 2023-06-01 18:45 GMT

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் திறந்த வெளியில் நிறுத்தப்படும் மோட்டார்சைக்கிள்கள் திருட்டு போகிறது. எனவே வாகன நிறுத்தும் இடம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்னால் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு திருவாரூர் மட்டுமின்றி நாகை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

நோயாளிகளை பார்த்து நலம் விசாரிக்கவும் பலர் வந்து செல்வது உண்டு. நோயாளிகள், அவர்களை பார்க்க வருபவர்களின் தாகத்தை போக்க குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகள் பிரிவு செயல்படும் புதிய கட்டிடத்தின் எதிரிலும், புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் அருகேயும் குடிநீர் குழாய் உள்ளது.

மோட்டார்சைக்கிள்கள் திருட்டு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் தங்களது மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள், கார்கள் போன்றவற்றில் வருகின்றனர். அப்படி வருபவர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, நோயாளிகளை பார்ப்பதற்காக செல்கின்றனர். இப்படி நோயாளிகளை பார்க்க வருபவர்களின் மோட்டார் சைக்கிள்களை சிலர் குறி வைத்து திருடி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்வதற்கே பலர் அச்சப்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரியை பொருத்தவரை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தான் பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களது வசதிக்காக மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது மோட்டார் சைக்கிளையும் மர்ம கும்பல் விட்டு வைப்பது இல்லை. அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே திருடிச் சென்றுவிடுகின்றனர்.

போதிய இடவசதி இல்லை

இதுபோன்ற மோட்டார் சைக்கிள்கள் திருட்டை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், இந்த திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

ஆஸ்பத்திரிக்கு சாதாரண மக்களே வருகிறோம். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால் ஆங்காங்கே நிறுத்தி செல்லும் நிலை உள்ளது. நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு உடனே வரும் நிலை இருந்தால் எங்கள் வாகனம் அதே இடத்தில் நிற்கும். நீண்ட நேரம் அல்லது 1 நாளுக்கு மேல் ஆகிவிட்டால் எங்கள் வண்டியை பற்றி கேள்வி குறிதான்?.

வாகனங்கள் பழுது

நாள் முழுவதும் மோட்டார் சைக்கிள்கள் வெயிலில் நிறுத்தப்படுவதால் வாகனத்தின் நிறங்கள் மாறுகிறது. மேலும் என்ஜின் பழுதாக வாய்ப்பு உள்ளது. மழையில் வாகனங்கள் நனைவதால் என்ஜினில் தண்ணீர் இறங்குவதால் வாகனங்களை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. மேலும் வாகன உதிரி பாகங்கள் துருப்பிடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருடர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மோட்டார்சைக்கிள்களை நிறுத்த போதிய இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்