குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.;

Update:2023-10-19 00:15 IST

திருநந்திக்கரை வியாலிவிளையை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 54), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் அர்ஜூனன் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் குலசேகரத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருந்திக்கரைகுளம் அருகில் வந்தபோது, எதிரே சேனங்கோடு பகுதியைச் சேர்ந்த பிஜோ ஜோசப் (18) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் அர்ஜூனன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அர்ஜூனன் மனைவி சரஸ்வதி குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்