மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்;ஐ.டி.ஐ. மாணவர் பலி

சின்னமனூரில் மோட்டார் சைக்கிள், மொபட் மோதிய விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் பலியானார். அவரது நண்பர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-31 19:30 GMT

ஐ.டி.ஐ. மாணவர்கள்

சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் சூர்யா (வயது 19). அதே ஊரை சேர்ந்த அழகுராஜா மகன் அருண்குமார் (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும், தேனி அருகே கோட்டூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் ஐ.டி.ஐ.க்கு தினமும் மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை அவர்கள் ஐ.டி.ஐ.க்கு சென்றனர். பின்னர் மாலையில் ஐ.டி.ஐ. முடிந்து மோட்டார் சைக்கிளில் சீலையம்பட்டி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சூர்யா ஓட்டினார். அருண்குமார் பின்னால் அமர்ந்து வந்தார்.

சின்னமனூரில், பைபாஸ் சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகில் அவர்கள் வந்தபோது, எதிரே சின்னமனூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான மூர்த்தி என்பவர் மொபட்டில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சூர்யா, அருண்குமார் மற்றும் மொபட்டில் வந்த மூர்த்தி ஆகியோர் தங்களது வாகனங்களில் இருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில், சூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் உயிருக்கு போராடினர்.

தீவிர சிகிச்சை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய அருண்குமார், மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த சூர்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்