டயர் வெடித்து நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

மருவத்தூர் அருகே டயர் வெடித்து நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதையடுத்து, செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-01 18:30 GMT

மாணவர் விடுதி சமையலர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 38). இவர் மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் செந்துறையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சிறுகளத்தூர் கிராமத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த உறவினர்களான சுரேஷ் மனைவி அமுதா (33) மற்றும் பரமசிவம் மனைவி அமராவதி (30) ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு ஊருக்கு சென்று கொண்டு இருந்தார்.

2 பேர் பலி

மருவத்தூர் அருகே சென்றபோது டயர் வெடித்து சாலையில் நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, பாக்கியராஜ் மற்றும் அமராவதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார். அதனை தொடர்ந்து அவரது உடலை மீண்டும் செந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பேச்சுவார்த்தை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் பலியான பாக்கியராஜ், அமுதாவின் உறவினர்கள் செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் தான் அவர்கள் இறந்ததாக கூறி அவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து, செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் பலியான 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர் கைது

இந்த நிலையில் பலியானவர்களின் உறவினர்கள் டிராக்டர் டிரைவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி டிராக்டர் டிரைவர் வசந்தன் (26) என்பவரை ஏற்கனவே கைது செய்து விட்டதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்