லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
பொள்ளாச்சி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார். பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியானார். பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வியாபாரி பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 30). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
இந்தநிலையில் சுபாஷ் நேற்று காலையில் நெகமத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுபாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சுபாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சாலை மறியல்
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாலை 3 மணி வரை உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உடுமலை ரோட்டில் வாகனங்களை குறுக்கே நிறுத்தி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உடனடியாக பிரேத பரிசோதனை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.