படப்பையில் மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; தொழிலாளி பலி
படப்பையில் மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.;
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆத்தணஞ்சேரி பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (வயது 57). கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு படப்பை ஆரம்பாக்கம் கூட்டு சாலை சந்திப்பில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையை கடக்க முயன்றார்.
வண்டலூர் -வாலாஜாபாத் சாலையில் படப்பை நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த பாலசுப்பிரமணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார், கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினர்.
பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த வல்லக்கோட்டை பகுதியை சேர்ந்த டாக்டர் சண்முகபிரியா (வயது 31) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.