வாகன உரிமத்துக்கு லஞ்சம் பெற்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

வாகன உரிமத்துக்கு லஞ்சம் பெற்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-08 21:45 GMT

துறையூர்:

ரூ.6 ஆயிரம் லஞ்சம்

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் சண்முகம். இவர் அப்பகுதியில் வாகன ஓட்டும் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இலகுரக வாகன உரிமம் பெறுவதற்காக, துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை(வயது 58) அணுகியுள்ளார். இதற்காக அவர், சண்முகத்திடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி போலீசார் சண்முகத்திடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் கொடுக்குமாறு சண்முகத்திடம் கூறினர்.

கைது

இதையடுத்து நேற்று அலுவலகத்தில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம், சண்முகம் பணத்தை கொடுத்தார். அவர் அதனை பெற்றபோது, அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அலுவலகத்தில் ஆவணங்கள் மற்றும் பணம் இருக்கிறதா? என்று தீவிர சோதனை நடத்தினார்கள். இச்சம்பவம் துறையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்