தொழிலாளி பலி
கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கபிஸ்தலம்;
அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது23). தொழிலாளியான இவர் கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் மணிகண்டன், கணபதி அக்ரஹாரம் கடைத்தெருவுக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டு தேவன்குடி நோக்கி சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.