தா.பழூர்:
தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி காலனி தெருவில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி தேவிகா(வயது 40). இவர்களது மகள் குமுதாவை(22) தேவிகாவின் தம்பி ராஜேஷ் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ரக்ஷனா என்ற பெண் குழந்தை உள்ளது. ராஜேஷ் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தையுடன் குமுதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, குமுதா குழந்தையுடன் சென்றுள்ளனர். பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், குமுதாவையும், குழந்தையையும் பல்வேறு இடங்களில் தேடியும், அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் தேவிகா அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து குமுதாவையும், அவரது குழந்தையையும் தேடி வருகிறார்.