6 வயது மகளை எரித்து கொன்று தாய் தற்கொலை

சிவகாசியில் 6 வயது மகளை எரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-04 20:01 GMT

சிவகாசி,

சிவகாசியில் 6 வயது மகளை எரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகளுடன் வசித்து வந்தார்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்-பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் அக்னிபுத்திரன். இவருக்கும் மருதவள்ளி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாழினி (வயது 6) என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் அக்னிபுத்திரன், மருதவள்ளி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 1 ஆண்டுக்கு முன்னர் அக்னிபுத்திரன், மருதவள்ளியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மருதவள்ளி, யாழினி மட்டும் தனியாக வசித்து வந்தனர். மருதவள்ளி திருத்தங்கலில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். யாழினி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்கொலை

வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு சென்ற யாழினியை மதிய உணவு இடைவேளையின் போது மருதவள்ளி வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் குழந்தை யாழினி மீது வீட்டில் இருந்த மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பின்னர் தானும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் இருவரது உடலிலும் தீப்பிடித்ததால் அலறல் சத்தம் கேட்டு அதே பகுதியில் வசித்து வரும் அக்னிபுத்திரனின் அண்ணன் ஈஸ்வரன், இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தாய், மகள் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்