மகன்கள் நிலத்தை அபகரித்து விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் தாய்- 2 மகள்கள் தீக்குளிக்க முயன்றனர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் (வயது 70) என்பவர் தன்னுடைய மகள்கள் லட்சுமி (47), சந்திரா (45) ஆகிய 3 பேரையும் அழைத்துக் கொண்டு நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்த அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் 3 பெண்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி உடலில் தண்ணீர் ஊற்றினர்.
இதுகுறித்து பொன்னம்மாள் கூறுகையில், எனக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். கணவர் பெயரில் இருந்த 2½ ஏக்கர் நிலத்தை 2 மகன்கள் பிரித்துக்கொண்டனர். எனது பெயரில் இருந்த 1½ ஏக்கர் நிலத்தையும் அபகரித்துக்கொண்டனர். எனது பெயரில் உள்ள நிலத்தை எனது மகள்களுக்கு பிரித்துக்கொடுக்க முடிவு செய்தேன். அந்த நிலத்தை தர மறுக்கின்றனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்த 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தீக்குளிக்க முயன்றோம் என்றார்.
பின்னர் பொன்னம்மாளை, போலீசார் சமாதானம் பேசி கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.
வீட்டு மனைப்பட்டா
சேலம் கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியை சேர்ந்த அரிச்சந்திரன் (53) என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனக்கு சொந்தமான ஓட்டு வீட்டை பாதாள சாக்கடை பணிக்காக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது. எனது வீட்டை இடித்து அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டை இழந்த நான் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.
வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியை சேர்ந்த சின்னையன் தலைமையில் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பனை மரம் ஏறி பிழைப்பு நடத்தி வரும் நாங்கள் பொன்னாரம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்தோம். நாங்கள் குடியிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றி விட்டு எங்களை வெளியேற்றினர். இதனால் வீடு இன்றி தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு அதே இடத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்றார்.
தர்ணா போராட்டம்
ஓமலூர் பெரியயேரிபட்டி பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறும் போது, எனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் எங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையை சிலர் அடைத்து விட்டனர். இதனால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இது குறித்து அவர்களிடம் கேட்டால் மிரட்டுகின்றனர். பெற்றோர் இல்லாமல் நாங்கள் 2 பேர் மட்டும் வீட்டில் இருப்பதால் பயமாக இருக்கிறது. எனவே எங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையில் உள்ள அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களை காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றனர். சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதே போன்று நேற்று ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.