உடுமலை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.;
பக்ரீத் பண்டிகை
இறைவனின் கட்டளைக்காக ஈன்றெடுத்த மகனை பலியிடத் துணிந்த இறை தூதரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12 வது மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-ம் நாள் பக்ரீத்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் 5-வது கடமையாக ஹஜ் புனித பயணம் வசதி உள்ள இஸ்லாமியர்களால் இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
பக்ரீத் தினத்தன்று அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகையை பூர்த்தி செய்யும் இஸ்லாமியர்கள் அதன் பின்பு ஒரு வயது பூர்த்தி அடைந்த ஊனம், நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை இறைவனின் பெயரால் பலி கொடுக்கின்றனர். பின்பு அந்த இறைச்சியை மூன்று சம பாகங்களாக பிரித்து முதல் பங்கு அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், 2-வது பங்கு ஏழைகளுக்கும் 3-வது பங்கு தேவைக்கு எடுத்துக்கொண்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
சிறப்பு தொழுகை
அந்த வகையில் நேற்று இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து புத்தாடைகளை உடுத்தி பண்டிகை கொண்டாடியதுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பு கலந்த மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். நோன்பை முன்னிட்டு உடுமலை பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு இறைவனை வணங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து குட்டை திடல் அருகே உள்ள ஜாமிஆ பள்ளிவாசலில் இருந்து பக்ரீத் ஊர்வலம் தொடங்கியது. தளிரோடு, பொள்ளாச்சிரோடு வழியாக இறைவனை வேண்டியவாறு சென்ற ஊர்வலம் கொல்லம்பட்டறை அருகே உள்ள பூர்வீக பள்ளிவாசலில் முடிவடைந்தது. அங்கு அனைவரும் பிரார்த்தனை செய்தனர். அதன் பின்பு வீடுகளுக்கு திரும்பிச்சென்று ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை பலியிட்டனர். அந்த இறைச்சியை நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார், ஏழைகளுக்கு கொடுத்தும் தங்களது தேவைக்கு எடுத்துக் கொண்டும் நோன்பை பூர்த்தி செய்தனர். ஊர்வலத்தை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இந்தனர்.